: கரூர் தனியார் பள்ளி ஆசிரியர் மாமனார் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து ஆசிரியர் 2 பக்கம் எழுதி வைத்துள்ள டைரி சிக்கியுள்ளது. கரூர் மாவட்டம், குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் சரவணன்(44). கரூரில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 கணித ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் துறையூர் அருகே செங்காட்டுப்பட்டியில் உள்ள மாமனார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீசார் கூறுகையில், தற்கொலை செய்த ஆசிரியர் சரவணனின் டைரி ஒன்று அறையில் கைப்பற்றப்பட்டது. அதில், ஜெயந்தி (மனைவி) ஐ லவ் யூ. பிரணவ்குமார், ரக்சிதன் (மகன்கள்) ஐ மிஸ் யூ. அம்மா, அக்கா அனைவரையும் மிஸ் பன்னுறேன். ஜெயந்தி என்னை மன்னித்து விடு, என்னை மாணவர்கள் அனைவரும் தவறாக நினைக்கிறார்கள். மாணவர்களின் முன் அவமானமாக இருக்கிறது. எனக்கு வாழ ஆசை இல்லை.
நான் பள்ளிக்கு வந்தவுடன் மாணவன் என்னை தவறாக கூறுகிறான். நான் எந்த தவறும் செய்யவில்லை. ஏன் இப்படி கூறுகின்றனர் என்று தெரியவில்லை. மாணவர்களை கோபத்தில் திட்டி இருக்கிறேன். அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள். நன்றாக படியுங்கள். ஐ மிஸ் யூ ஆல் என உருக்கமாக எழுதி வைத்துள்ளார் என்று தெரிவித்தனர். ஆசிரியர் சரவணன் பணியாற்றிய அதே பள்ளி பிளஸ் 2 மாணவிதான் கடந்த 19ம் தேதி ஆசிரியர் பாலியல் துன்புறுத்தலால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இப்போது ஆசிரியர் சரவணன் தற்கொலை செய்திருப்பதால் இவர்தான், அந்த மாணவி கடிதத்தில் குறிப்பிட்ட மற்றொரு நபரா? என விசாரணை நடக்கிறது.
கைதான ஆசிரியருக்கு 2 நாள் போலீஸ் காவல்
கோவை தனியார் பள்ளி பிளஸ் 2 மாணவி, ஆசிரியர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கடிதம் எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்த வழக்கில் கைதான ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியிடம் மேலும் பல தகவல்களை சேகரிப்பதற்கு கோவை அனைத்து மகளிர் போலீசார் முடிவு செய்தனர். அதன்படி அவரிடம் 5 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு கோவை நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்திருந்தனர். அவரை 2 நாள் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி நேற்று அளித்தார். அதன்படி அவரை விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். இதனிடையே ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை கோர்ட்டில் இருந்து போலீசார் வெளியே அழைத்து வந்தபோது வாலிபர் ஒருவர், அவரை நோக்கி, ஆக்ரோஷமாக கோஷம் எழுப்பியபடி பாய்ந்து வந்தார்.