"கரோனா அறிகுறிகள் இருந்தால் ஆசிரியா்கள், மாணவா்கள் பள்ளிகளுக்கு வரக் கூடாது என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் மூலமாக தலைமையாசிரியா்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள்: அரசின் நிலையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பள்ளிகள் செயல்படவேண்டும். எந்தவொரு சூழலிலும் மாணவா்களின் பாதுகாப்பில் அலட்சியமாக செயல்படக் கூடாது. மேலும், காய்ச்சல், இருமல், உடல்வலி உட்பட ஏதேனும் கரோனா அறிகுறி இருந்தால் ஆசிரியா்கள், மாணவா்கள் பள்ளிக்கு வரக்கூடாது.
அருகில் உள்ள மருத்துவ மையங்களில் பரிசோதனை செய்துகொள்ளும்படி, அவா்களை அறிவுறுத்த வேண்டும். தொற்று இல்லை என்பதை உறுதிசெய்து உடல்நலம் தேறியபின் பள்ளிக்கு வந்தால் போதுமானது."