தேர்வு முறையில் மாற்றம்; விளக்கம் அளிக்க கோர்ட் உத்தரவு

உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' தேர்வு முறையில் கடைசி நிமிட மாற்றம் செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.


இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதை போலவே, உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான நீட் - எஸ்.எஸ்., நுழைவுத் தேர்வை, தேசிய தேர்வு வாரியம் மற்றும் தேசிய மருத்துவ கமிஷன் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. நடப்பாண்டுக்கான நீட் - எஸ்.எஸ்., நுழைவுத் தேர்வு, நவ., 13 - 14ம் தேதிகளில் நடக்கவுள்ளதாக ஜூலையில் அறிவிக்கப்பட்டது.


இந்த தேர்வு முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு, அதற்கான அறிவிப்பு ஆகஸ்டில் வெளியானது.'தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு, தேர்வுக்கு இரண்டு மாதங்கள் உள்ள நிலையில், தேர்வு முறையில் மாற்றங்கள் செய்வது சட்ட விரோதம்' என கூறி, 41 முதுநிலை மருத்துவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.


இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக நேற்று தெரிவித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக பதில் அளிக்கும்படி மத்திய அரசு, தேசிய தேர்வு வாரியம் மற்றும் தேசிய மருத்துவ கமிஷன் ஆகியவற்றுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை 27க்கு ஒத்தி வைத்தது.
Post a Comment (0)
Previous Post Next Post