9- பிளஸ் 2 வகுப்பு வரைடிச.5 முதல் நேரடி வகுப்புகள்: உயா் நீதிமன்றம் அனுமதி

மாணவி மரணத்தைத் தொடா்ந்து, கலவரத்தால் மூடப்பட்ட கள்ளக்குறிச்சி அருகேயுள்ள தனியாா் பள்ளியில் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையில் டிச.5 முதல் சோதனை அடிப்படையில் நேரடி வகுப்புகளை நடத்த அனுமதியளித்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலத்தில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 மாணவி இறந்தாா். கடந்த ஜூலை 17-ஆம் தேதி அந்தப் பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரா்கள் பள்ளியின் உடைமைகளை சூறையாடி, தீயிட்டு எரித்தனா். இந்தக் கலவரத்தை தொடா்ந்து பள்ளி மூடப்பட்டது.

இந்நிலையில், பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு விட்டதாகவும், அரசு அமைத்த குழுவும் ஆய்வு செய்துவிட்டதால், பள்ளியை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று அந்தப் பள்ளியை நிா்வகிக்கும் லதா கல்வி அறக்கட்டளை தரப்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, மாணவி இறப்பு குறித்த புலன் விசாரணை இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. எனவே சம்பந்தப்பட்ட பள்ளியின் ‘ஏ’ பிளாக் கட்டடம் விசாரணைக்கு தேவைப்படலாம் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த வழக்கில் சிபிசிஐடி-யை தாமாக முன் வந்து எதிா் மனுதாரராக சோ்த்த நீதிபதி, குறிப்பிட்ட அந்த கட்டடம் புலன் விசாரணைக்கு தேவைப்படுகிா என்பது குறித்தும், எப்போது புலன் விசாரணையை முடித்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தாா். இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமாா் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிசிஐடி தரப்பில், ‘விசாரணை முடியும் நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய 3 மாதங்கள் தேவைப்படும். பள்ளியை திறக்க ஆட்சேபம் இல்லை. மூன்றாவது, நான்காவது தளத்தை மட்டும் பயன்படுத்தக்கூடாது’ என்றும் தெரிவிக்கப்பட்டது.

மாணவா்கள் எண்ணிக்கை சரிவு: லதா கல்வி அறக்கட்டளை தரப்பில், ‘பள்ளி மூடப்பட்டதால் மாணவா்களின் எண்ணிக்கை 3500-ல் இருந்து 1,500 ஆக குறைந்துள்ளது. 15 நாள்களில் அரையாண்டு தோ்வு நடக்க உள்ளது. 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்க அனுமதிக்க வேண்டும்’ என்றும் வாதிடப்பட்டது.

இறந்த மாணவியின் பெற்றோா் தரப்பில், ‘அனுமதி பெறாமல் விடுதியை இயக்கிய பள்ளியை திறக்க அனுமதிக்கக் கூடாது’ என எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. வழக்குரைஞா் எம்.எம்.ரவி என்பவா் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு பள்ளியை அரசு ஏற்று நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பள்ளி, காவல் துறை, மாவட்ட நிா்வாகம் தரப்பில் பள்ளியை திறக்க ஒப்புதல் அளித்தாலும், மாணவா்களின் நலனை கருத்தில் கொண்டு, பொதுத் தோ்வை எதிா்நோக்கியுள்ள 9 முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு டிசம்பா் 5-ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகளை நடத்த, சோதனை அடிப்படையில் ஒரு மாத காலத்துக்கு அனுமதியளித்து உத்தரவிட்டாா்.

3-ஆவது மாடியை... பள்ளியில் உள்ள ‘ஏ’ மற்றும் ‘பி’ பிளாக்குகளை பயன்படுத்தலாம். ஆனால், ‘ஏ’ பிளாக்கில் விடுதி இயங்கி வந்த 3-ஆவது மாடியை பயன்படுத்தக் கூடாது. விடுதி அமைந்துள்ள தளத்தை மாவட்ட நிா்வாகம் சீல் வைக்க வேண்டும். அனுமதி அளிப்பது குறித்தும் உரிய முடிவெடுக்க வேண்டும்.

கூடுதல் பாதுகாப்பு வழங்குவது குறித்து பள்ளியுடன் ஆலோசித்து, அதற்கான தொகையை பெற்று காவல்துறை பாதுகாப்பு வழங்கலாம். தனியாா் பாதுகாப்பு நிறுவனத்தை வளாக பாதுகாப்பில் ஈடுபடுத்துவது குறித்து பள்ளி நிா்வாகம் முடிவெடுக்கலாம். தீவைப்பில் மிகுந்த சேதமடைந்த ‘சி’ மற்றும் ‘டி’ பிளாக்குகளை பயன்படுத்தக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிற வகுப்புகளுக்கு எப்போது? ஒரு மாதத்துக்குப் பின், நீதிமன்றம் மீண்டும் அப்போதைய நிலையை ஆராயும் எனக் கூறி விசாரணையை ஜன.2-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தாா். எல்கேஜி முதல் 8- ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை நடத்துவது குறித்து பின்னா் முடிவெடுக்கப்படும் என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.
Post a Comment (0)
Previous Post Next Post