TNPSC : குரூப் - 1 தேர்வு விடைகள் மறு ஆய்வு கோரி வழக்கு

'குரூப் - 1' முதல் நிலை தேர்வு விடைகளை மறு ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கக் கோரிய வழக்கில், அரசு பணியாளர்கள் தேர்வாணையம் பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த ஆண்டு ஜனவரியில், குரூப் - 1 பணியிடங்களுக்கான தேர்வு நடந்தது.

இதில், பல கேள்விகளக்கான விடைகள் தவறாக அளிக்கப்பட்டு இருப்பதாக ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து, மூவர் குழுவை தேர்வாணையம் நியமித்தது. சில கேள்விகள், விடைகள் தான் தவறாக இருந்ததாகவும், அதற்கு மதிப்பெண் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.மொத்தம், 60க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு ஆட்சேபனை தெரிவிக்கப் பட்டதாக கூறி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், புதிய குழு ஆய்வு செய்து, ஒரே ஒரு கேள்வி தான் தவறாக இருந்ததாக அறிக்கை அளித்தது. அதன் அடிப்படையில், வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களில், 'குழு அளித்த அறிக்கை சரியல்ல; அந்த அறிக்கையை, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான நிபுணர் குழு மறு ஆய்வு செய்ய வேண்டும். 'மேலும், அனைத்து கேள்வி, பதில்களையும் மறு ஆய்வு செய்ய வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

மனுக்கள், நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், முகமது சபீக் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர் எம்.ராமமூர்த்தி ஆஜரானார். மனுவுக்கு பதில் அளிக்கும்படி, அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.
Post a Comment (0)
Previous Post Next Post