ஆசிரியர்களை பழிவாங்கும் தி.மு.க., அரசு! - டீ கடை பெஞ்ச்

டீ கடை பெஞ்ச்

ஆசிரியர்களை பழிவாங்கும் தி.மு.க., அரசு! ''முதல்வர் தனிப்பிரிவுல குடுக்கற மனுவுக்கு கூட மரியாதை இல்லை ஓய்...'' என, துண்டால் வியர்வையை துடைத்தபடியே அமர்ந்தார், குப்பண்ணா.

''யார் கொடுத்த புகார் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''சேலம் மாவட்டம், தலைவாசல் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட கிராமங்கள்ல நில அபகரிப்பு, சட்டவிரோத செயல்கள்ல சிலர் தலைவிரிச்சு ஆடறா... போலீஸ்ல சொல்லியும் தீர்வு கிடைக்காததால, நொந்து போன கிராம மக்கள், முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பினா ஓய்...

''உடனே, 'இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுங்கோ'ன்னு உயரதிகாரிகள் உத்தரவு போடறா... ஆனா, ஆளுங்கட்சி ஆட்கள், தொழிலதிபர்கள், போலீசாருக்கு வேண்டப்பட்டவா மேல புகார் வந்தா, புகார் குடுத்தவாளை ஸ்டேஷனுக்கு வரவழைச்சு, 'என் பிரச்னை, 'சால்வ்' ஆகிடுத்து... மேற்கொண்டு விசாரணையோ, நடவடிக்கையோ தேவைஇல்லை'ன்னு எழுதி வாங்கிண்டு அனுப்பிடறா ஓய்...

''முதல்வர் தனிப்பிரிவு மனுவுக்கே இதான் கதின்னா, வேற யார்கிட்ட போய் முறையிடறதுன்னு புகார் குடுத்தவா புலம்பிண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா. ''சென்னை, தாம்பரம் போலீஸ் கமிஷனர் ஆபீஸ் நுண்ணறிவு பிரிவு உயர் அதிகாரியா இருக்கிறவர், ஸ்டேஷன்கள்ல இருக்கிற நுண்ணறிவுப் பிரிவு போலீசாரை அதிரடியா இடமாற்றம் செய்தாரு வே...'' என, அடுத்த தகவலுக்கு வந்த அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''சம்பந்தப்பட்ட போலீசாரின் ஒப்புதலோ, விருப்ப மனுவோ எதுவுமே இல்லாம இந்த இடமாற்றத்தை செய்துடுதாரு... கூடுதல் துணை கமிஷனர் பொற்செழியனுக்கு கூட இந்த விஷயம் தெரியாதாம் வே...

''இணை மற்றும் துணை கமிஷனர்கள் உத்தரவு இல்லாம, அந்த அதிகாரி தன் இஷ்டத்துக்கு ஆடுறது சட்டம் - ஒழுங்கை பாதிக்கிறது மட்டுமில்லாம, அதிகாரிகளுக்குள்ள இருக்கிற மோதலை அதிகமாக்கிடுதுன்னு ஓய்வு பெற்ற ஆபீசர்ஸ் சொல்லுதாவ வே...'' என்ற அண்ணாச்சி, எதிரில் வந்தவரைப் பார்த்து, ''வாரும் வெற்றிச்செழியன்... எப்படி இருக்கீரு...'' என, நலம் விசாரித்தார். உடனே, ''தி.மு.க.,வும் பழிவாங்கும் படலத்தை ஆரம்பிச்சிடுச்சுங்க...'' என, கடைசி தகவலுக்கு வந்தார், அந்தோணிசாமி.

''என்ன செஞ்சா ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''மாணவர்கள் சுயதொழில் செஞ்சு முன்னுக்கு வர நம்பிக்கை ஊட்டும் விதமா, 9வது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு மத்திய அரசின் நிதி உதவியுடன், தொழிற்கல்வி பாட திட்டத்தை போன அ.தி.மு.க., ஆட்சியில கொண்டு வந்தாங்க... ''அவங்க கொண்டு வந்ததை நாம ஏன் நிறைவேத்தணும்னு, திராவிட மாடல்னு சொல்லிக்கிற தி.மு.க., அரசு நினைக்குதுங்க... அதனால, வர்ற கல்வியாண்டு முதல் தொழிற்கல்வி பாட திட்டம் கிடையாதுன்னு அறிவிச்சிட்டாங்க...

''ஆடை வடிவமைப்பு, அழகுக்கலை, சமையல் உள்ளிட்ட பாடங்களை சொல்லித் தர, 200க்கும் மேற்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர்களை நியமிச்சிருந்தாங்க... இப்ப, இவங்களுக்கு வேலை போகப் போகுதுங்க...

''பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள், பள்ளிக்கல்வி உயர் அதிகாரிகளை சந்திச்சு, 'மத்திய அரசு நிதி தரலையா... தொழிற்கல்வி பாடத்தை திடீர்னு ஏன் நிறுத்துறீங்க'ன்னு கேட்டிருக்காங்க... 'அதெல்லாம், 2026 வரைக்கும் வேண்டிய நிதி இருக்கு... இது, மாநில அரசின் கொள்கை முடிவு'ன்னு சொல்லிட்டாங்களாம்...'' என்றபடியே அந்தோணிசாமி எழ, அனைவரும் நடையை கட்டினர்.
Post a Comment (0)
Previous Post Next Post