விடைத்தாளில் எதுவுமே எழுதாத மாணவர்கள் - 10ம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு செய்த ஆசிரியர்கள் அதிர்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், பல மாணவர்கள் விடைத்தாள்களில் எதுவுமே எழுதாததால், மதிப்பீடு செய்த ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக பள்ளிகள் முறையாக செயல்படவில்லை. பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்களுக்கு, 9, 10ம் வகுப்புகளில் மொத்தமே, 3 மாதம் கூட பாடம் நடத்தவில்லை. அந்த மூன்று மாத வகுப்புகளுக்கும் பல மாணவர்கள் வரவில்லை.இந்நிலையில், கடந்த மாதம், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்பட்டது.

இதில், 5 சதவீதத்துக்கும் மேல், மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை .தேர்வில் பங்கேற்காத மாணவர்களை தேடிப்பிடித்து, அடுத்தடுத்த தேர்வில் பங்கேற்க செய்ய ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது.இருப்பினும், தேர்வு கடினமாக இருந்ததால், படித்த மாணவர்களே திணறினர். இதனால், விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் போது, மதிப்பெண்களை தாரளமாக வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.ஆனால், பல மாணவர்கள் விடைத்தாளில் எதுவுமே எழுதாமல் வழங்கியிருந்தனர். இதை கண்ட ஆசிரியர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:

விடைத்தாள் மதிப்பீட்டு முகாமில், ஒற்றை இலக்கத்தில் மதிப்பெண் வந்தால், மேல் அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.வினாக்களை எழுதி வைத்திருந்தால் கூட, அதற்கு மதிப்பெண் வழங்கப்பட்டது. ஆனால், பல மாணவர்கள் விடைத்தாளில் எதுவுமே எழுதாமல் வழங்கியிருந்தனர்.

இவர்களுக்கு பூஜ்யம் மதிப்பெண் வழங்க முடியாமல், இணை இயக்குனர் வரை பார்வைக்கு கொண்டு சென்று, ஆசிரியர்கள் விளக்கம் எழுதி கொடுக்க நேர்ந்தது.இதற்கு எளிதாக வினாத்தாள் வடிவமைத்து இருந்திருந்தால் கூட, மாணவர்கள் நம்பிக்கையுடன் தேர்வெழுதியிருப்பர்.தாராளமாக மதிப்பீடு செய்தும் கூட, 40 சதவீத மாணவர்களை தேர்ச்சி பெற செய்வது சிக்கலாக இருந்தது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Post a Comment (0)
Previous Post Next Post