பசியை வென்ற படிப்பு - பிச்சையெடுப்பதிலிருந்து மீட்கப்பட்டவர் 10ஆம் வகுப்பில் சாதனை

பிச்சையெடுப்பதிலிருந்து மீட்கப்பட்டவர் 10ஆம் வகுப்பில் சாதனை: பசியை வென்ற படிப்பு

ஆக்ரா: சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சாலையோரம் பிச்சையெடுத்து வந்த சிறுவன், இன்று பத்தாம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார்.

உத்தரப்பிரதேச பள்ளிக் கல்வித் துறை கடந்த சனிக்கிழமையன்று 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட்டது. அதில், 17 வயது ஷேர் அலி 63 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, தன்னைப் போன்ற ஏழை மக்கள் வாழும் அப்பகுதியில் ஒரு முன்னுதாரணமாக மாறியுள்ளார்.

ஷேர் அலி வாழும் பகுதியிலிருக்கும் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குப்பைகளைப் பொறுக்குதல், சாலையோரம் பிச்சையெடுத்தல் போன்ற தொழில்களையே செய்கிறார்கள். ஷேர் அலியின் பெற்றோரைப் போலவே, அவர் வசிக்கும் பகுதியில் எவரொருவரும் இதுவரை 10ஆம் வகுப்பு வரை படித்ததே இல்லை.

தனது பகுதியில் முதல் நபராக பத்தாம் வகுப்பு அதுவும் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற, மற்ற குழந்தைகளுக்கு முன்மாதிரியாக மாறியிருக்கும் ஷேர் அலி ஆங்கிலப் பாடத்தில் 100-க்கு 80 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

இவர் 8-க்கு 8 அடி அறையில் தனது எட்டு சகோதரர்கள் மட்டும் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் வசிக்கும் குடிசையில் மின்வசதி இல்லை.

அப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் நல ஆர்வலர் நரேஷ் பரஸ் என்பவர்தான், ஷேர் அலியை பிச்சையெடுக்கும் தொழிலிலிருந்து மீட்டு, பள்ளியில் சேர்க்கை பெற உதவியுள்ளார்.

எனது தேர்வு முடிவுகள் மிகுந்த நம்பிக்கையை அளிக்கின்றன. இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம் என்கிறார்.

இது பற்றி அவரது தந்தை கூறுகையில், எனது மகனைப் பின்பற்றி தற்போது பல குழந்தைகள் பள்ளிச் செல்கின்றன. ஷேர் அலியின் சகோதரியும் தற்போது ஒன்பதாவது படித்து வருகிறார். அவரது தாய் கூறுகையில், எனது பிள்ளைகள் பல நாள்கள் பசியோடு இருந்திருக்கிறார்கள். உணவில்லாத நிலையிலும் கூட பள்ளிச் செல்லாமல் இருந்ததில்லை என்கிறார் பெருமையோடு.
Post a Comment (0)
Previous Post Next Post