மே 16 முதல் பள்ளிகள் திறப்பு: கா்நாடக கல்வித் துறை அமைச்சா் பி.சி.நாகேஷ்

கா்நாடகத்தில் மே 16-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் பி.சி.நாகேஷ் தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

கா்நாடகத்தின் ஒரு சில பகுதிகளில் வெயில் கொளுத்துவதாக தகவல்கள் வந்துள்ளன. அதற்காக, பள்ளிகள் திறக்கப்படுவதை தள்ளிப்போடும் எண்ணமில்லை. ஏற்கெனவே திட்டமிட்டபடி மே 16-ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். அடுத்த சில நாட்களில் மாநிலத்தில் வெப்பநிலை உயரும் என்ற எவ்வித முன்னெச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கவில்லை. 2022-23-ஆம் கல்வியாண்டை தொடங்குவதை தள்ளிவைக்கும்படி எவ்விதக் கோரிக்கையும் அரசுக்கு வரவில்லை.

கடந்த 2 ஆண்டுகளாக கரோனா காரணமாக மாணவா்களின் கற்றல் நடைமுறை வெகுவாக பாதிக்கப்பட்டது. இதை சரிசெய்யும் நோக்கத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை குறைத்து, மே 16-ஆம் தேதி முதலே பள்ளிகளைத் திறக்க அரசு முடிவுசெய்தது. இதில் எவ்வித மாற்றமும் இல்லை என்றாா்.
Post a Comment (0)
Previous Post Next Post