அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வுக்கு படிக்க உண்டு உறைவிட பயிற்சி முகாம் துவக்கம்

பூந்தமல்லி வட்டம், நசரத்பேட்டை எஸ்கேஆர் பொறியியல் கல்லூரியில் மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் மருத்துவம் சார்ந்த நுழைவுத் தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்ட இலவச உண்டு, உறைவிட பயிற்சி முகாம் தொடக்க விழா நடைபெற்றது. முகாமிற்கு எஸ்கேஆர் பொறியியல் கல்லூரி தலைவர் கே.ராமதாஸ், பொருளாளர் எஸ்.சுரேஷ்பாபு, வட்டாட்சியர் ஆர்.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ப.அ.ஆறுமுகம், ஆவடி மாவட்ட கல்வி அலுவலர் ஆ.ராதாகிருஷ்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ந.பூபால முருகன் ஆகியோர் வரவேற்றனர். முகாமை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்து, மாணவ, மாணவியர்களோடு கலந்துரையாடி, ஆலோசனைகள் வழங்கினார். அப்போது அவர் தெரிவித்ததாவது : திருவள்ளுர் மாவட்டத்தில் 200 அரசு பள்ளிகளைச் சார்ந்த மாணவ, மாணவியர்களை தேர்வு செய்து, 50 நாட்கள் நீட் தேர்வுக்கான உண்டு, உறைவிட பயிற்சி முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வருடம் பிளஸ் 2 தேர்வு எழுதியவர்கள் மட்டுமல்லாமல், கடந்த வருடம் பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களுக்கும் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. நீட் தேர்வில் வெற்றி பெற கடினமாக உழைக்கும் தங்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக ஒரு உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த 50 நாட்கள் பயிற்சியில் உங்களது முழு கவனமும் இருக்க வேண்டும். உங்களுக்கு கூடுதல் நன்மைகள் உள்ளது. அதாவது, மாநிலத்திலேயே புகழ்பெற்ற ஆசிரியர்கள் உங்களுக்கு இந்த 50 நாட்கள் பயிற்சி எடுக்கின்றனர். நாள்தோறும் குறிப்பிட்ட தலைப்புகளில் கொண்ட பாடங்களை எடுப்பார்கள். அதற்கான தேர்வுகளையும் நடத்துவார்கள். அன்றன்றைக்கு சொல்லிக்கொடுக்கும் பாடத்திட்டங்களை முழு கவனத்துடன் ஈடுபட்டு படித்து, அடுத்த நாள் முழு அர்ப்பணிப்புடன் தேர்வு எழுத வேண்டும். கடந்த வருடத்தில் எளிய முறையில் அரசு மருத்துவமனைகளில் சிட் கிடைத்துள்ளது. இந்த வருடமும் நல்ல முறையில் சீட் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. நாமும் அதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த இனிய வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Post a Comment (0)
Previous Post Next Post