அரசு கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் - உயர் கல்வித்துறை அமைச்சர்

''கல்லுாரிகளில் புதிய பாடப்பிரிவுகள் துவக்கப்படும்,'' என, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

காங்கிரஸ் - கணேஷ்: ஊட்டி தொகுதி, குந்தா வட்டம், மஞ்சூரில் பாலிடெக்னிக் கல்லுாரி துவக்க வேண்டும். இங்குள்ள அரசு கலை, அறிவியல் கல்லுாரியில், பி.சி.ஏ., விலங்கியல், தமிழ் இலக்கியம் போன்ற படிப்புகளையும் துவக்க வேண்டும்.

அமைச்சர் பொன்முடி:

நீலகிரி மாவட்டத்தில், ஒரு அரசு பாலிடெக்னிக், ஒரு அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் அமைந்துள்ளது. அரசு பாலிடெக்னிக்கில், 360 மாணவர்கள் சேரலாம். ஆனால், 151 பேர் தான் சேர்ந்துள்ளனர்.

அரசு உதவி பெறும் பாலிடெக்னிக்கில், 240 இடங்களுக்கு, 116 மாணவர்கள் சேர்ந்துஉள்ளனர்.பொதுவாக பாலிடெக்னிக்கில், தற்போது மாணவர்கள் அதிகம் சேருவதில்லை. பாலிடெக்னிக்கில் மாணவர்கள் அதிகம் சேர வேண்டும் என்பதற்காக, 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், தொழில் பயிற்சி அளிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுதும், 1.67 லட்சம் மாணவர்கள் சேர இடங்கள் உள்ளன. இதுவரை, 56 ஆயிரத்து 800 பேர் தான் சேர்ந்துள்ளனர்.

அ.தி.மு.க., - செந்தில்குமார்:

கள்ளக்குறிச்சி அரசு கலை, அறிவியல் கல்லுாரிக்கு, கடந்த ஆட்சியில் இடம் தேர்வு செய்யப்பட்டு, கட்டடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. விரைவாக கட்டடம் கட்டித் தர வேண்டும்.

அமைச்சர் பொன்முடி:

புதிதாக துவக்கப்பட்ட கல்லுாரிகளுக்கு, கட்டடம் கட்டப்படும். மேலும், 56 கல்லுாரிகளில் உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்த, முதல்வர் அனுமதி அளித்துஉள்ளார். தமிழக வாழ்வுரிமை கட்சி - வேல்முருகன்:

பண்ருட்டி தொகுதியில், கலை அறிவியல் கல்லுாரி துவக்க வேண்டும்.அமைச்சர் பொன்முடி: அரசு கல்லுாரி இல்லாத தொகுதிகளுக்கு, முன்னுரிமை அளிக்கப்படும். இந்த ஆண்டு, 11 கல்லுாரிகள் துவக்கப்பட உள்ளன.

தி.மு.க., - கணபதி:

சென்னை மதுரவாயல் தொகுதியில், கலை அறிவியல் கல்லுாரி அமைக்க போதிய இடம் உள்ளது.

அமைச்சர் பொன்முடி:

ஒரு கல்லுாரி துவக்க, ஆண்டுக்கு, 20 கோடி ரூபாய் செலவாகும். எனவே, நிதி நிலை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும்.அ.தி.மு.க., - பொன்.ஜெயசீலன்: நீலகிரி மாவட்டம், கூடலுார் தொகுதியில், அரசு கலைக்கல்லுாரி உள்ளது.

இக்கல்லுாரியில் தாவரவியல், விலங்கியல், வேதியியல், தமிழ் இலக்கியம் துறைகளை ஏற்படுத்த வேண்டும்.அமைச்சர் பொன்முடி: கல்லுாரிகளில் கூடுதல் படிப்புகளை துவக்க, முதல்வர் அனுமதி அளித்துள்ளார். இந்த ஆண்டு புதிய படிப்புகள் துவக்கப்படும். பத்து கல்லுாரிகளில் பி.எச்.டி., படிப்பு துவக்கப்பட உள்ளது. கல்லுாரி முதல்வர்கள் புதிதாக எந்த பாடப்பிரிவு துவக்க வேண்டும் என கருத்துரு அனுப்பினால், பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.
Post a Comment (0)
Previous Post Next Post