27 இடத்துக்கு 6,486 பேர் விண்ணப்பம் - கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு குவிந்த இன்ஜினியரிங் பட்டதாரிகள்

27 இடத்துக்கு 6,486 பேர் விண்ணப்பம் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு குவிந்த இன்ஜினியரிங் பட்டதாரிகள்: மாட்டை மரத்தில் கட்டி, சைக்கிள் ஓட்டிக்காட்டினர்

கால்நடை உதவியாளர் பணி

தர்மபுரியில் நேற்று கால்நடை உதவியாளர் பணிக்கான நேர்காணல் துவங்கியது. மொத்தமுள்ள 27 காலிப்பணியிடங்களுக்கு 6,486 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 10ம் வகுப்பு மட்டுமே கல்வித்தகுதியாக இருந்த போதிலும், எம்பிஏ., பி.இ., மற்றும் பிஎட் பட்டதாரிகளும் குவிந்தனர்.

தர்மபுரி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையில், காலியாக உள்ள 27 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல், நேற்று தர்மபுரி அரசு கலைக்கல்லூரி கலையரங்கத்தில் தொடங்கியது. இந்த நேர்காணல் வரும் 23ம் தேதி வரை நடக்கிறது. இப்பணிக்காக மொத்தம் 6,486 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து தினசரி 1,100 பேருக்கு நேர்காணல் நடத்த, அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று 1,100 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் 700 பேர் மட்டுமே நேர்காணலில் கலந்து கொண்டனர்.

இதில் முதலில் விண்ணப்பங்களை சரிபார்த்த அலுவலர்கள், நேர்காணலில் கலந்து கொண்டவர்களுக்கு, கால்நடைகளை நன்கு கையாள தெரிந்திருக்க வேண்டும். சைக்கிள் ஓட்டவும் தெரிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும், முன்னதாகவே துறை சார்பில் முகாம் நடந்த கல்லூரி வளாகத்தில் 10 மாடுகள் கட்டி வைத்திருந்தனர். 10 சைக்கிகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
குவிந்த இன்ஜினியரிங் பட்டதாரிகள்

இதையடுத்து நேர்காணலில் கலந்து கொண்டவர்களை வரிசையாக அழைத்துச் சென்று, மாடுகளை, மரத்தில் கட்டுவது எப்படி என செய்து காட்ட வைத்தனர். பின்னர் அவர்களை சைக்கிள் ஓட்டி காட்டச்செய்தனர்.

தொடர்ந்து 23ம் தேதி வரை நேர்காணல் நடைபெற உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடத்திற்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது பெயிலாகி இருந்தால் போதும். ஆனால், பிஇ, எம்ஏ., எம்பிஏ., பிஎட்., பிஎஸ்சி., என பெரும்பாலும் இன்ஜினியர்கள், பட்டதாரிகளே விண்ணப்பம் செய்துள்ளனர். நாங்கள் எங்களுக்கான விதிமுறைப்படி தான் நேர்காணலை நடத்தி வருகிறோம்,’’ என்றனர்.
Post a Comment (0)
Previous Post Next Post