படிக்கட்டில் பள்ளி மாணவர்கள் பயணம்: மூன்று துறை அலுவலர்கள் கூட்டாய்வு

திருவள்ளூர் பகுதியில் பள்ளி மாணவர்கள் பேருந்துகளின் படிக்கட்டுகளில் பயணம் செய்வதாக வந்த செய்திகளின் அடிப்படையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம், காவல் துணை கண்காணிப்பாளர் சந்திரதாசன், நகர காவல் ஆய்வாளர் பத்மஸ்ரீ பபி, போக்குவரத்து கழக கிளை மேலாளர் எழில் ஆகியோர் ஒன்றிணைந்து திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே நேற்று மாலை கூட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த அரசு மற்றும் தனியார் பேருந்துகளை நிறுத்தி மாணவர்கள் படியில் பயணம் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தினர். பின்னர் திருவாலங்காடு செல்லும் பேருந்தில் மாணவர்கள் அதிகமாக வந்ததால் இதுகுறித்து போக்குவரத்து கழக கிளை மேலாளரிடம் கேட்டபோது அந்த நேரத்தில் இயங்கும் இரண்டு பேருந்துகளும் ஒரு மணி நேர இடைவெளியில் செல்வதால் முதல் பேருந்தில் கூட்டம் அதிகமாக உள்ளது என்று கூறினார்.

எனவே அவரிடம் காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகியோர் இரண்டு பேருந்துகளுக்கும் இடைப்பட்ட நேரத்தை சரிசெய்தும் கூட்டநெரிசல் நேரத்தில் கூடுதலாக ஒரு பேருந்தை இயக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். அவரும் அதற்கு இசைவு தெரிவித்து கூடுதல் பேருந்தை விரைவில் ஏற்பாடு செய்து தருவதாக கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் அவ்வழியாக வந்த அரசு விரைவு பேருந்து ஒன்றை நிறுத்தி அதில் பொருத்தப்பட்ட கண் கூசும் எல்இடி விளக்கை அப்பேருந்தின் ஓட்டுநரை வைத்து உடைத்தும், மாணவர்களுக்கு படிக்கட்டு பயணம் குறித்து அறிவுரைகளை வழங்கி துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தும் விழிப்புணர்வு பிரசாரம் செய்தார்.
Post a Comment (0)
Previous Post Next Post