ஓய்வூதிய வல்லுனர் குழு அறிக்கை என்னாச்சு; அரசு ஊழியர், ஆசிரியர்கள் குமுறல்

ஓய்வூதிய வல்லுனர் குழு அறிக்கை என்னாச்சு; அரசு ஊழியர், ஆசிரியர்கள் குமுறல்

ஓய்வூதிய வல்லுனர் குழு அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்து மூன்று ஆண்டுகளாகியும், எந்த முடிவும் எடுக்காதது அரசு ஊழியர், ஆசிரியர்களிடையே மனக்குமுறலை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் 1.4.2003 முதல் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தில் 6 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டனர். இவர்களிடம் பிடித்தம் செய்த தொகை ரூ.46 ஆயிரம் கோடி. இதுவரை பதவி விலகிய, மரணமடைந்த 23 ஆயிரம் பேருக்கு பண பலன்களை இதுவரை வழங்கவில்லை. இதுபோன்ற காரணங்களால் அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் புதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. 2016ல் அன்றைய முதல்வர் ஜெயலலிதா பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த சாத்தியக் கூறுகளை ஆராய ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில் வல்லுநர் குழு அமைத்தார். அதன்பின் ஸ்ரீதர் தலைமையில் செயல்பட்ட இக்குழு 27.11.2018 அன்று அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது.

தகவல் அறியும் சட்டம்

இதுகுறித்து சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் ஏங்கல்ஸ் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கல்வித் துறையிடம் சில கேள்விகளை கேட்டுள்ளார்.பங்களிப்பு ஓய்வூதிய நிதி, எந்த தேதிகளில் எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுளளது. மத்திய அரசு போல், தமிழக ஊழியர்களுக்கு பணிக்கொடை, குறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் அரசின் பங்களிப்பு 14 சதவீதமாக உயர்த்த தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன, வல்லுனர் குழு அறிக்கை விவரம் என்ன என்று கேட்டு இருந்தார்.

இதற்கு கல்வித்துறை அளித்துள்ள பதிலில், முதல் கேள்விக்கு ஆயுள் காப்பீட்டு நிறுவன ஓய்வூதிய நிதியில் ரூ.28 ஆயிரத்து 725 கோடியும், ஏல அடிப்படையில் கருவூல பட்டி கணக்கில் ரூ.16 ஆயிரத்து 500 கோடியும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த கேள்விக்கு அரசு ஆணை வெளியிடப்படவில்லை எனவும், 3வது கேள்விக்கு வல்லுனர் குழு அறிக்கை பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்படவில்லை என்றும் பதில் அளித்துள்ளது. அரசுக்கு உபரி நிதி கிடைக்கும்

பிரெடரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: வல்லுனர் குழு அறிக்கை வெளியிடாதது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடையே மனக்குமுறலை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., தேர்தல் அறிக்கையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வோம் என்றனர். உடனே அதை செயல்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தினால் அரசுக்கு ரூ.23 ஆயிரம் கோடி உபரி நிதியாக கிடைக்கும், என்றார்.
Post a Comment (0)
Previous Post Next Post