கை இறுக்கமாக தைத்து சீருடை அணிவதா? பிளஸ் 1 மாணவனை சரமாரி தாக்கிய ஆசிரியர்

கோவை கணபதி உதயா நகரைச் சேர்ந்தவர் 16 வயது மாணவர். இவர் கோவை நகரில் அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். பள்ளியில் மாணவர்கள் அனைவருக்கும் சீருடை வழங்கப்பட்டது. இதை வாங்கி சென்ற மாணவர், சட்டை பெரியதாக இருந்ததால், அவரது தாய் சட்டையை சரியான அளவில் திருத்தம் செய்து தைத்து கொடுத்தார். அந்த சட்டையை அணிந்து கொண்ட பிளஸ் 1 மாணவர் வழக்கம்போல நேற்று காலை பள்ளிக்கு சென்றார். மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்திருந்தபோது வகுப்புக்கு வந்த ஆசிரியர் ஒருவர், சீருடை குறித்து விசாரித்தார். அந்த மாணவரை எழுந்து நிற்க வைத்து, ‘‘நாங்கள் என்ன அளவில் சீருடை கொடுத்தோம், நீ ஏன் ஸ்டைலாக ஆல்டர் செய்து போட்டு வந்திருக்கிறாய்?’’ எனக்கேட்டார். ‘‘கை இறுக்கமாக சீருடை அணியக்கூடாது என தெரிவித்தும் அதுபோல் ஏன் மாறுதல் செய்தாய்?” எனக்கேட்டு பிரம்பினால் அந்த மாணவரின் முகுது, கை, கால்களில் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த மாணவர் வலி தாங்காமல் அலறி துடித்தார். உடனே மற்ற ஆசிரியர்கள் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக புகாரின்படி சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து ஆசிரியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Post a Comment (0)
Previous Post Next Post