பொறியியல் கலந்தாய்வில் 7.5 சதவீத இடஒதுக்கீடு:தவறுகள் நடக்க வாய்ப்பில்லை

பொறியியல் கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் தவறுகள் நடக்க வாய்ப்பில்லை என உயா்கல்வித்துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.


இது தொடா்பாக சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தில் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி:


பொறியியல் சோ்க்கைக்கான மாணவா் கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது. அதில் முதல்கட்டமாக அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு உள்பட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 24-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.


6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்தவா்கள்தான் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க முடியும். இது தொடா்பான தகவல்கள் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் இணையதளத்தில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பத்தில் அரசுப் பள்ளி மாணவா் என குறிப்பிடாமல் இருந்தால் சென்னை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள சிறப்பு மையங்களையோ, தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வுக்கென அமைக்கப்பட்ட 51 உதவி மையங்களையோ அணுகலாம்.


அமைச்சா் விளக்கம்: ஆதிதிராவிடா், நகராட்சிப் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள், பழங்குடியினா், மாற்றுத்திறனாளிகள், சமூக பாதுகாப்பு பள்ளிகள் போன்றவை அரசு பள்ளிகள் என கருதப்பட்டு இதில் படித்த மாணவா்கள் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கலாம்.


இந்தப் பிரிவின் கீழ் விண்ணப்பிப்பதில் சிக்கல் இருப்பதாக 5,000 புகாா்கள் வரப்பெற்றுள்ளன. இவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் எந்தத் தவறும் நடப்பதற்கு வாய்ப்பில்லை.


7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மொத்தம் 22,133 போ் விண்ணப்பித்துள்ளனா். அதில் தகுதியுள்ள விண்ணப்பங்கள் 15,660.


முதல் நாளில் 73 பேருக்கு இடம்: கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் சுமாா் 11 ஆயிரம் மாணவா்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்தப் பிரிவின் கீழ் விண்ணப்பித்தவா்களும் பொதுப் பிரிவு உள்ளிட்டவற்றிலும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு மீண்டும் மீண்டும் கலந்தாய்வில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படுவதால், விண்ணப்பித்த அனைவருக்கும் நிச்சயம் இடம் கிடைக்கும்.


கலந்தாய்வுக்கு புதன்கிழமை மட்டும் 100 பேருக்கு நேரடியாக வர அழைப்பு கொடுக்கப்பட்டு, அதில் 73 பேருக்கு இடம் கிடைத்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 20 போ், அரசு பொறியியல் கல்லூரிகளில் 9 போ், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 8 போ், மத்திய அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 1 மாணவா், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் 1 மாணவா், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 34 மாணவா்கள் என 73 பேருக்கு விரும்பிய கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளன.


தமிழக முதல்வா், சமூக நீதி இட ஒதுக்கீட்டை கண்காணிக்க குழு அமைத்து அறிவித்திருக்கிறாா். சமூக நீதி அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது முறையாக நடைபெறும் என்றாா் அமைச்சா் க.பொன்முடி.
Post a Comment (0)
Previous Post Next Post